சிவ ஸ்தலங்களுக்கு தலைமையாக அமைந்த சிவ ராஜதானி நாகப்பட்டினம் நகரை சுற்றி அமைந்துள்ள  பண்ணிரு சிவாலயங்களில் வீரபத்திரர் வழிபட்ட ஸ்ரீ விசாலாட்சி சமேத விஸ்வநாதர் திருக்கோயில் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

தெற்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இக்கோயில் நகரின் கடைத்தெரு வீதிகளின் அருகே  அமைந்துள்ளது. மூலவர் விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும், அம்பிகை விசாலாட்சி தெற்கு நோக்கியும், மற்றும் வீரமாகாளியம்மன் வடக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர்.   

பிரகார திருச்சுற்றில் வீரபத்திர சுவாமிக்கு தனி சன்னதியும், மற்றும் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னதிகளும் அமைந்துள்ளது.


தல வரலாறு

பிரம்மாவின் மகனான தட்ச பிரஜாபதி, சிவபெருமானை அழைக்காமல் மற்ற தேவர்களை எல்லாம் கூட்டி யாகம் செய்ய ஏற்பாடு செய்தான். இதை தவறென  உணர்த்த சென்ற தேவியையும் அவமானப்படுத்தினான்.

 தட்சனின் ஆணவத்தை அடக்க சிவபெருமான் தனது ஜடாமுடியில் இருந்து தோற்றுவித்த வீரபத்திரரும், பத்ரகாளியம்மனை கொண்டு அவனையும் அவன் யாகத்தையும்  அழித்தார். இதில் கலந்து கொண்ட மற்ற தேவர்களையும் வீரபத்திரர் தண்டித்தார்.

தட்சன் மற்றும் தேவர்களை தண்டித்த தோஷம் நீங்க வீரபத்திரர் ஈசனை வேண்டினார். சிவபெருமானும் அதற்கு உபாயமாக இந்த யாகத்தில் பயன்படுத்திய மாலைகளை கங்கைக்கரையில் விட்டு அவை கரை சேரும் இடத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து என்னை நோக்கி வழிபட்டு வரும்படி அருளினார் . 

அதன்படியே அந்த மாலைகள் கங்கைக் கரையில் விட்டு நாகையில் கரை சேர்ந்தன, வீரபத்திரரும் காளியை காவலாக வைத்து சிவ லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார் என்பது இத்தல ஐதீகம்.


சிறப்பம்சங்கள்

பொதுவாக தட்சன் வீரபத்திரரின் அருகே ஆட்டுத் தலையுடன் கை கூப்பிய வண்ணம் காணப்படுவார் ஆனால் இங்கு வீரபத்திரரின் கையில் தட்சனின் வெட்டப்பட்ட தலை இருப்பது வேறெங்கும் காணமுடியாத சிறப்பம்சமாகும். ஐப்பசி பூரம் அன்று வீரபத்திரரின் சாப நிவர்த்தி  ஐதீக விழா நடைபெற்று வருகிறது. அன்று உச்சிக்காலத்தில் வீரபத்திரருக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் அகோர வீரபத்திரர் உற்சவமூர்த்தி மூலவர் விசுவநாத சுவாமி சன்னதிக்கு எழுந்தருளி சிறப்பு பூஜையும் நடைபெறும் . அன்று வீரபத்திரர் சிவபூஜை செய்வதாக ஐதீகம். அந்நாளில் மட்டுமே வீரபத்திரரும் விஸ்வநாதரும் ஒரு சேர காட்சி அளிக்கின்றனர்.

வீரபத்திரரின் முன்மண்டபத்தில் வீரசக்தி எழுந்தருளியுளளார். காவல் தெய்வமாகிய வீரமாகாளி கீழ் மூன்று தரையில் உள்ளது. தலவிருட்சமாக இலந்தை மரமும் வீர கங்கை  தீர்த்தமாகவும் உள்ளது.

நாகை பா.சுபாஷ் சந்திர போஸ் 

Sri veerabhadra swami temple, nagapattinam. 
Click here for (Google Maps)












Post a Comment

புதியது பழையவை