கலியுக தெய்வமான கந்தக் கடவுள் அற்புதங்கள் நிகழ்த்திய பல தலங்களில்  ஒன்றாக, கைகளில் விரல் நகங்கள், நரம்புகள் ஆகியன தெரியும்படியான உயிரோட்டமுள்ள சிலா திருமேனியாக அமைந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும், இத்திருக்கோயில் ஆனது நாகப்பட்டினம் அருகே பொருள் வைத்த சேரி எனும் பொரவச்சேரி இல் அமைந்துள்ளது.

தொலைவிலிருந்து வரும் பொழுதே ஐந்து நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அதைக் கடந்து  கொடிமரத்தை தாண்டி மேடை போன்ற கட்டுமலையின் படிகளின் வழியே மேலே ஏறி சென்றால் மூலவர் சுந்தரேஸ்வரர் சன்னதியும் அதன் அருகே தெற்கு நோக்கி ஞான கடவுளாக அழகே உருவான முருகப்பெருமான் ஆறு முகமும், பன்னிரு தோளும் மயில் மீது கம்பீரமாய் அமர்ந்த கோலத்தில், வள்ளி தேவசேனா சமேதராக காட்சியளிக்கிறார்.

மேலும் மற்ற சன்னதிகளும் பிரகாரத்தில் நாயன்மார்கள், பின்புற பக்கவாட்டில் திருக்குளமும் இடும்பன் சன்னதி ஆகியன அமைந்துள்ளது.

தல வரலாறு

இம் முருகனை வடித்த சிற்பியின் வரலாறு மிகவும் வியக்கத்தக்கது.

இப்பகுதியைச் சேர்ந்த தெய்வத் தன்மை வாய்ந்த திறமைமிக்க சிற்பி ஒருவர் சதாசர்வகாலமும் முருகனின் திருநாமத்தை உச்சரித்தபடி வாழ்ந்து கொண்டிருந்தார்.

அங்கு அரசாண்டு வந்த முத்தரச சோழன் கோயில் கட்ட எண்ணம் கொண்டு இந்த சிற்பி இடம் ஆறுமுகக் கடவுளின் திருவுருவச் சிலையை வடிக்குமாறு ஆணையிட்டான்.

சில காலத்திலேயே முருகனின் திருவருளால் அனைத்து லட்சணங்களும் பொருந்திய உயிரோட்டமுள்ள சிலையை வடிவமைத்தார் சிற்பி. அதைக் கண்ட மக்கள் வியந்து பெருமகிழ்ச்சி கொண்டனர். ஆனால் அம்மன்னன் இதைப்போன்ற வேறு சிற்பம் எங்கும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியின் வலது கை கட்டைவிரலை வெட்டிவிட ஆணையிட்டான்.

  சிற்பியோ மனம் தளராமல் அருகிலுள்ள எட்டுக்குடி கிராமத்திற்கு சென்று, வேலவனை வேண்டி தன் இடக் கையால் கடும் முயற்சி செய்து மற்றுமொரு சிலையை வடிவமைத்தார். இதை அறிந்த முத்தரச சோழன் மனம் பொறுக்காமல் சிற்பியின் இரு கண்களையும் குருடாக்கினான்.

பின் வலக்கை கட்டை விரலும், இரு கண்களும் இன்றி ஒரு சிறுமியின் துணைகொண்டு சிற்பி  எண்கண் எனும் தலத்தில் மீண்டுமொரு ஆறுமுகர் சிற்பத்தை வடிவமைத்தார். சிலைக்கு கண்திறக்கும் தருவாயில் அருகில் உதவி செய்த சிறுமியின் கையில் உளி பட்டு ரத்தம் பீறிட்டது, அது சிற்பியின் கண்களில் பட்டு மீண்டும் கண் பார்வை பெற்றார். முருகனே சிறுமியாக வந்து திருவிளையாடல் புரிந்து சிற்பிக்கு அருள் புரிந்து ஆட்கொண்டார்.


திருக்கோயில் சிறப்புகள்

ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்ட மயில் மீது அமர்ந்த ஆறுமுகப் பெருமான் சிக்கல் (பொரவச்சேரி), எட்டுக்குடி, எண்கண் ஆகிய தளங்களில் அருள்பாலிக்கிறார்.

இதில் மற்ற இரு திருக்கோயிலை காட்டிலும் இக்கோயிலிலுள்ள மூர்த்தி பெரியது என்பதாலும், இங்குள்ள சன்னதியின் அமைப்பின் காரணமாக நாம் மிக அருகில் சென்று மயிலின் கால் நகம் முதல் முருக பெருமானின் திருஉருவத்தை, அவர் கைகளின் நரம்பு உள்பட தரிசனம் செய்யலாம் .

இராஜ சிற்பியின் கலை நுணுக்கத்தில் இந்த முருகனின் இடது புறங்கையில் ஓடும் பச்சை நரம்பினை இன்றும் நாம் காணலாம்.

மூலவரான ஆறுமுகப்பெருமான் சிற்பத்தின் சிறப்பு முழு மூர்த்தத்தின் (திருவாச்சி உள்பட) எடை முழுவதையும் ஊன்றி இருக்கும் மயிலின் கால்கள் தாங்கி இருக்கிறது. இது போன்ற சிற்பத்தை காண்பதரிது.


இந்த ஆலயத்தின் அருகே சொர்ண காளி அம்மனும், சற்று தொலைவில்  சொர்ணபுரீஸ்வரர் சவுந்தர்ய நாயகி அம்மன் கோயில் தனியாக அமைந்துள்ளது.

சிக்கல் முருகன் திருக்கோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே இக் கோயில் அமைந்துள்ளது. சிக்கல் சிங்கார வேலனே தரிசனம் செய்ய வரும்போது இத்தலத்தையும் தவறாமல் தரிசனம் செய்து அருள் பெறுங்கள். நன்றி

நாகை பா.சுபாஷ் சந்திர போஸ் 

Sri kantha swami Temple (Google Map)
Poravachery, Nagapattinam, Tamil Nadu


 











Post a Comment

புதியது பழையவை