செம்பியன் மாதேவி
💐 சோழப்பேரரசின் ராஜமாதா
💐 சைவத் திருமுறையின் திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவரான சிவஞான கண்டராதித்தர் சோழரின் பட்டத்து ராணி.
💐 "உத்தமசோழரைத் திருவயிறு வாய்த்த பராந்தகன் மாதேவடிகளார்"
💐 #சோழ தேசத்தின் சிவாலயங்களை காலத்திற்கும் நிலைபெற்று போற்றும் படியாக கற்றளியாக மாற்றிய பெருந்தேவியார்.
💐 சிவாலயங்களின் மறுமலர்ச்சிக்காக பல திருப்பணிகளை அவர்களின் தொடர்ச்சியாக செய்விக்க அடித்தளமிட்ட சைவப்பெருந்தகையார்.
💐 இவர் வாழ்ந்த காலத்தில் ஆறு சோழப் பேரரசுகளை கண்டவர். அவர்களில் பின்னர் வந்த ஆதித்த கரிகாலர், குந்தவைப் பிராட்டியார், அருண்மொழித்தேவர் எனும் ராஜராஜசோழன் ஆகியோருக்கு வழிகாட்டியாக இருந்த பெரும் பாட்டியார் .... .... ... ....
💐 இவ்வாறாக இன்னும் பல போற்றுதலுக்குரிய பெரிய பிராட்டியார் செம்பியன்மாதேவி அவர்களின் பெயரில் #நாகை அருகே அமைந்த ஊரில் சிவாலயம் அமைந்திருப்பதை அறிந்து பல காலமாக செல்ல வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தேன்.
💐 கடந்த சித்திரை கேட்டை அன்று அவர்களின் திருநட்சத்திரம் என்று அறிந்து கொண்டபின் மாதேவியாரை காணும் ஆவல் மேலும் பெருகியதையடுத்து நேற்று நண்பருடன் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது.
💐 நாகை - வேளாங்கண்ணி நெடுஞ்சாலையிலிருந்து ஒரத்தூர் (மருத்துவக் கல்லூரி) செல்லும் சாலை வழியாக சில தூரம் கடந்து சென்றபின், நகர்ப்புற இரைச்சல் குறைந்தது அமைதியான கிராமப்புற சாலைகள் வழியாக பயணம் தொடர்கிறது ...
💐 சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்களின் நிழலும், அருகே ஓடும் ஓடையின் ஈரக்காற்றும், வண்டுகள், பூச்சிகளின் ரீங்காரமும், சித்திரை வெயிலிலும் உடலுக்கும், மனதிற்கும் இதமாக அமைந்து, வெகுகாலம் கழித்து புத்துணர்ச்சி பெற்றேன்.
💐 கோடையிலும் வற்றாது நீர் நிறம்பிய பெரியதோர் திருக்குளமும், நெடிதுயர்ந்து தான் கிளைகளைப் பரப்பிய ஆலமரத்தின் நிழலின் அருகில் மூன்று அடுக்குகளுடன் கூடிய மொட்டை கோபுரத்துடன் கோயில் முகப்பு அமைந்துள்ளது.
💐 உள்ளே சென்றதும் கொடிமரம் அடுத்து இரண்டாம் நிலை ராஜகோபுரமும் அதனை அடுத்து சென்றதும் இடது பக்கவாட்டில் சிறியதொரு தனி சன்னதியில் கை கூப்பியவாறு சோழப் பேரரசி செம்பியன் மாதேவியார் அமைந்துள்ளார்.
💐 இக் கோயிலின் மூலவரான இறைவன் "ஶ்ரீ கைலாயமுடைய மஹாதேவர்" எனக் கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றுள்ளார். சுவாமி சன்னதி மிகவும் சாநித்தியத்துடன் அமைந்து, வாயிலின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் பிரமாண்டமாய் அமைந்துள்ளனர்.
💐 கோஷ்ட மூர்த்திகளாக அகத்தியர், நடராஜர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிட்சாடனர் ஆகியோர் எழிலார்ந்த திருவுருவங்களாக அமைந்துள்ளனர்.
பல எண்ணற்ற நிவந்தங்கள் குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகள் கோயில் எங்கும் அமைந்துள்ளன. செம்பியன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் சோழ மண்டலத்தின் மிக செழிப்பான நகர்களில் ஒன்றாக அமைந்து இருந்ததாக குறிப்புகள் கிடைக்கின்றது.
வரலாற்று விரும்பிகள், சிவாலயம் தரிசனம் செய்வோர் தவறாமல் இந்த ஆலயத்தையும் தரிசித்து விட்டு செல்லலாம். வெளியூரிலிருந்து வருபவர்கள் கீழ்வேளூர், தேவூர் அடுத்து நாகை செல்லும் கிராம சாலையில் இக்கோயிலை அடையலாம்.
திருச்சிற்றம்பலம்
✍️ நாகை பா. சுபாஷ்
கருத்துரையிடுக